இல்லறம்



அதிகாலை ஐந்து மணி, வாசல் கதவை தட்டும் சத்தம் லட்சுமியின் காதில் விழ, இந்த நேரத்துல யாரு கதவ தட்டுறது, என்ற யோசனையோடு மூடிக்கொண்டிருந்த லட்சுமியின் கண்கள் சற்றே திறந்து அவள் கனவனை பார்த்தது. என்னங்க யாரோ கதவ தட்டுறாங்க என்று லட்சுமி தன் கனவனிடம் சொல்ல, ராமசாமியின் கண்களும் உறக்கத்திலிருந்து விழித்து கொண்டன.

லட்சுமி போயிட்டு யருன்னு பாரும்மா என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராமசாமியின் கண்கள் மெதுவாக மீண்டும் உறக்கத்திற்கு திரும்பியது.

இப்ப யாரு கதவ தட்டுறது, பால்காரிதான் இன்னைக்கு வரமாட்டேன்னு சொன்னாலே, என லட்சுமியின் உதடும் மனசும் மாறி மாறி உறையாடிக்கொண்டிருக்க அவளது கைகள் கதவை திறந்த போதே, லட்சுமியின் மனது பட படக்க ஆரம்பித்தது.

என்னம்மா உஷா, என்னாச்சு, ஏம்மா இந்த நேரத்துல வந்துருக்க, மாப்பிள எங்கம்மா, மாசமா இருக்குற இந்த நேரத்துல நீ மட்டும் தனியா வந்துருக்க, என்று கேட்கும்போதே லட்சுமியின் குரலில் பயம் தெரிந்தது.

என்ன ஏதும் கேட்காதம்மா, நான் இனி இங்கேயே இருந்துடுறேன், இனி ஒரு நிமிஷம் கூட அவன்கூட என்னால வாழ முடியாது, சொல்லிக்கொண்டே உஷா உள்ளே நுழைந்தாள்.

லட்சுமி, என்னாச்சு, யாரு வந்துருக்காங்க என்று கேட்டுக்கொண்டே ராமசாமி படுக்கை அறையிலிருந்து வெளியே வர, லட்சுமியின் கண்களில் கண்ணீர் படர ஆரம்பித்துக் கொண்டிருந்தது. இங்க பாருங்க உஷா அவ புருசன் கூட சண்டை போட்டுகிட்டு வந்துட்டா, என்னடி நடந்ததுன்னு கேட்டா?, எதுவும் சொல்ல மாட்டேங்குறாங்க. எனக்கு வேற பயமா இருக்குங்க நீங்க என்னென்னு கேளுங்க.

என்னம்மா, என்னாச்சு, ஏன் நீ மட்டும் வந்துருக்க, உன் வீட்டுக்காரு எங்கமான்னு, ராமசாமி, உஷாவை பார்த்து கேட்க, அவள் அடுக்கி கொண்டே போனாள் அவள் வார்த்தை கோலங்களை. அப்பா நான் இனி அந்த ஆளுகூட வாழ மாட்டேன், மாட்ட போட்டு அடிக்குற மாதிரி என்னை போட்டு அடிக்குறான். தினம் தினம் ஒரே குடிதான். வேலைக்கும் போறதில்ல, வீட்டுல சாப்பாடு செய்யகூட காசுல்ல, எதாச்சும் கேட்டா,நீ யாருடி என்னை கேள்விக் கேக்குறதின்னு என்னை போட்டு உதைக்குறான். என்னால எப்படி அவன்கூட வாழ முடியும். ஒரு நிமிஷம் கூட இனி நான் அவன்கூட வாழ மாட்டேன். என சொல்லிக்கொண்டே போனாள் உஷா.

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு தெரியும், நான் அப்பவே சொன்னேன், பெத்தவங்க பேச்ச கேட்டாதான, அவன்தான் முக்கியம், கல்யாணம் செஞ்சிக்கிட்டா அவனதான் பண்ணிப்பேன்னு சொன்ன, எங்க பேச்சை மீறியும், அவன்தான் முக்கியம்னு அவன் பின்னாடியே போன, இப்ப பார்த்தியா என்னாச்சுன்னு, இப்ப என்னடான்னா அவன்கூட வாழ மாட்டேன்னு கண்ண கசக்கிக்கிட்டு வந்து நிக்குற.

உங்க அக்கா, லீலாவ எடுத்துக்க, அவளும் உன்கூட பொறந்தவ தான் அவள பார்த்தாச்சும் உனக்கு புத்தி இருந்திருக்க வேணாம். எங்க பேச்சை மீறி என்னைக்காச்சும் நடந்துருக்காளா, நாங்க பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொன்ன பையனையே கல்யானாம் பண்ணிக்கிட்டா, இன்னைக்கு வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம சந்தோசமா இருக்குறா. என்னைக்காச்சும் ஒரு நாள் உன்னை மாதிரி கண்ணை கசக்கிக்கிட்டு வ்ந்துருப்பாளா. இதுக்குத்தான் பெத்தவங்க சொல்ற பையன பார்த்து கல்யாணம் பண்ணனும்னு சொல்றது. எங்க பேச்செல்லாம் கேட்டாதான என்று ராமசாமி உஷாவைப் பார்த்து வசை பாடிக்கொண்டிருக்க, லட்சுமியின் கண்கள் மட்டும் கண்ணீரோடு லீலாவின் நிலைமையை நினைத்து கரைந்து கொண்டிருந்தது.

அம்மா எப்படிம்மா இருக்க, ஏம்மா அடிக்கடி வர மாட்டேங்குற, அப்பா, நல்லா இருக்கங்களா, உஷாவ போய் பார்த்தியாம்மா, அவ எப்படி இருக்கா. அப்பாவையும் அழைச்சிட்டு வந்துருக்கலாம்ல.

அப்பா அடுத்த மாசம் ஒரு வேலையா, இங்க வர்றாங்கடி லீலா, அப்பவந்து உன்னை பாக்குறேன்னு சொன்னங்கடி, சரி நீ எப்படிம்மா இருக்க, மாப்பிள நல்லா இருக்கரா?, ரெண்டு பேரும் சந்தொசமா இருக்கீங்களாம்மா, என்று லட்சுமி கேட்க லீலாவின் கண்களில் கண்ணீர் மட்டுமே மிச்சம்.

ஏம்மா, என்னாச்சு, ஏதாச்சும் சண்டையாம்மா, ஏம்மா அழுற, மாப்பிளையும் நீயும் சந்தோசமா இல்லையாம்மா, சொல்லும்மா என்ன ஆச்சு? என்று லட்சுமி லீலாவைப் பார்த்து கேட்க,

ஏம்மா, இப்படி ஏன் வாழ்க்கைய வீணாக்குனீங்க அவரு நல்லவரு இல்லம்மா, எனக்கு போன மாசந்தான் தெரிஞ்சிது, அவருக்கு கல்யாணத்துக்கு முன்னாடிலிருந்தே வேற பொண்ணுகூட தொடர்பு இருக்குன்னு, நான் ஏதாச்சும் கேட்டா,

நான் இப்படித்தான் இருப்பேன், உனக்கு ஏதாச்சும் இதுவரைக்கும் குறைவச்சிருக்கேனா, நல்லாதான வச்சிருக்கேன், என்ன ஏதும் கேக்காத, இல்ல ஏன்கூட வாழ இஷ்டம் இல்லன்னா உங்க அம்மா வீட்டுக்கு போயிடுன்னு சொல்றாரும்மா, எனக்கு நரகத்துல வாழுற மாதிரி இருக்கும்மா, என்னால சந்தோசமாவே இருக்க முடியிலம்மா.

ஏன் புருசன் செய்ற தப்புக்கு, கோச்சிகிட்டு நான் நம்ம வீட்டுக்கு வந்துட்டா, வீணா, அப்பாக்கும் உனக்குந்தாம்மா கெட்டபேரு. பொண்ணு அவ புருசன் கூட வாழாம வாழா வெட்டியா வந்து உக்காந்துருக்கான்னு, யாரச்சும், ஏதாச்சும், சொல்லிட்டா, நீங்க ரெண்டு பேரும் மனசு கஷ்ட படுவீங்களேன்னுதான், கஷ்டமோ, இஷ்டமோ, இவருகூடவே வாழ்ந்துடலாம், என்னைக்காச்சும், இவரு திருந்திடுவாருன்னு ஒரு நம்பிக்கைலதான் நான் வாழ்துட்டுருக்கேம்மா. இதெல்லாம் எதையும் அப்பாகிட்ட சொல்லிடாதம்மா, அப்புறம் அப்பா ரொம்ப கஷ்டப்படுவாங்க. என்று லீலா சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளது கைகள் கண்ணீரை துடைத்துக்கொண்டது......

Comments